search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை மாவட்டம்"

    நெல்லை மாவட்டத்தில் திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 57 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 667 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகள் மற்றும் பார்களை அடைக்க உத்தர விடப்பட்டிருந்தது. இதனால் அனைத்து மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டன. 

    நெல்லை மாவட்டத்திலும் அனைத்து மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டிருந்தது. ஆனாலும் மதுக்கடை, பார் அருகே சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் நேற்று மது விற்றதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 

    இவர்களிடம் இருந்து மொத்தம் 2100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை புறநகர் பகுதியில் தடையை மீறி மது விற்றதாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 567 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் மாவட்டம் முழுவதும் 57 பேர் கைது செய்யப்பட்டு 2667 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #DenguFever #SwineFlu
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    இதில் ஒரு சிலருக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் காணப்படுகிறது. அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 22 பேர் டெங்கு, பன்றிகாய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள முன்னீர் பள்ளம் பகுதியை சேர்ந்த தொழிலாளி முத்து கிருஷ்ணன் (வயது 55), பாளை சமாதானபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி செல்வம் (வயது 30) ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த‌னர்.

    இருவரும் நேற்று பரிதாபமாக இறந்தனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மாநகராட்சி பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டும் நகராட்சி, பேரூராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலமும் கிராம பகுதிகளிலும் ஒரு யூனியனுக்கு 3 நடமாடும் வாகனம் மூலம் சிறப்பு சுகாதார குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். #DenguFever #SwineFlu
    நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று செங்கோட்டை பகுதியிலும் கனமழை கொட்டியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று செங்கோட்டை பகுதியில் கனமழை கொட்டியது. குண்டாறு, அடவி நயினார் அணை பகுதிகளிலும் நன்றாக மழை பெய்தது. கடனாநதி அணை பகுதியிலும் நேற்று கனமழை கொட்டியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக செங்கோட்டையில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த படியாக கடனாநதி அணை பகுதியில் 21 மில்லி மீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 17 மில்லி மீட்டரும், தென்காசியில் 13 மில்லி மீட்டரும், மழை பெய்துள்ளது. மாநகர பகுதியான நெல்லையில் 2 மில்லி மீட்டரும், பாளையில் 3.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை பகுதியில் குறைந்த அளவாக 1 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட சற்று குறைந்து 104.15 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையில் தண்ணீர் எதுவும் இல்லை. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 11 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று 84.40 அடியாக உள்ளது.

    கடனாநதி-63, ராமநதி -47.25, கருப்பாநதி-58.07, குண்டாறு-32.38, வடக்கு பச்சையாறு-20, நம்பியாறு -19.94, கொடுமுடியாறு-31.75, அடவிநயினார்-85 அடிகளாக நீர்மட்டம் இன்று உள்ளது.

    களக்காட்டில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் கொளுத்துவதும், மதியத்திற்கு பின் வானம் மேகக்கூட்டங்களுடன் காணப்படுவதுமாக இருந்து வந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. சுற்றுவட்டாரத்தில் பெய்த போதும் களக்காட்டில் மழை பெய்யாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று களக்காட்டில் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மதியத்திற்கு பின்னர் வானில் மேகக் கூட்டங்கள் திரண்டன. அதன் பின் மாலை 4 மணியளவில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக மழை நீடித்தது.

    இந்த மழையினால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தெருக்களில் ஆறு போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தெருக்கள் வெள்ளக்காடானது. திருக்கல்யாணத்தெரு கருத்த விநாயகர் கோவில் முன் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    செங்கோட்டை-23, கடனாநதி-21, குண்டாறு-17, கருப்பாநதி-14, தென்காசி-13, ராமநதி-12, அடவிநயினார்-7, சங்கரன் கோவில்-6, சேர்வலாறு-6, அம்பை-5.2, பாளை-3.6, சிவகிரி-3, ராதாபுரம்-3, நெல்லை-2, ஆய்க்குடி-1.8, பாபநாசம்-1. #tamilnews
    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கிராமப்பகுதில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் தொழில்கள் முடங்கும் நிலை உண்டாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் பகல்வேளையிலும், இரவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகளில் மின்வெட்டு காரணமாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சங்கரன்கோவில், புளியங்குடி பகுதியில் ஏராளமான விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறி கூடங்களிலும் மின்வெட்டு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    பகலில் கடும் வெப்பம் நிலவும் வேளையில் மின் தடை காரணமாக மேலும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவிலும் இதே நிலை தொடர்கிறது. சராசரியாக கிராமப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலும், நகர்ப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்," நெல்லை மாவட்டத்தில் பணகுடி, ஆலங்குளம், ஊத்துமலை பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தேன்மேற்கு பருவக்காற்றினால் இந்த காற்றாலைகளில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காற்று குறைந்ததால் மின் உற்பத்தி குறைந்துவிட்டது. அதே வேளையில் மின் நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது" என்றார்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தூத்துக்குடி தொழிற்சாலைகள் நிறைந்துள்ள பகுதி என்பதால் மின்வெட்டு கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் கல்வியும் பாதித்துள்ளது. #tamilnews
    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    ராமநதி அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 1 மில்லி மீட்டர், அம்பையில் 2.2. மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவியில் இன்று சற்று கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இது போல அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 655 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணையில் இருந்து அனைத்து தண்ணீரும் பாபநாசம் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 205 கனஅடி தண்ணீர் வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.86 அடியாக உள்ளது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 34.50 அடியாக இருந்தது. ஒரே நாளில் அங்கு 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையில் குறைந்தபட்ச அளவான 19.68 அடியில் சகதி மட்டும் உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை சற்று உயர்ந்து 72.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது போல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது.


    நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ரே‌ஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் குருமூர்த்தி உத்தரவின் பேரில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ரே‌ஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் குருமூர்த்தி உத்தரவின் பேரில், துணை பதிவாளர் ரியாஜ் அகமது தலைமையில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் 24 கிலோ அரிசி, 55 கிலோ சீனி, 17 லிட்டர் மண்எண்ணெய், 9 கிலோ கோதுமை, 25 கிலோ துவரம் பருப்பு, 4 லிட்டர் பாமாயில், 344 பாக்கெட் தேயிலை, 271 பாக்கெட் உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவு ஏற்படுத்தியதும், போலி பதிவு மூலம் விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. சில கடைகளில் கூடுதல் இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டின் மதிப்பு ரூ.15 ஆயிரத்து 366 ஆகும். தவறு செய்த பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பாயிண்ட் விற்பனை எந்திரங்கள் மூலம் விற்பனை பட்டியல் போடப்படுவதால், போலி விற்பனை பதிவு செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.#tamilnews
    ×